Monday, January 28, 2008

கம்யூனிஸ்டு என்ற பாசிஸ்டுகள் by செல்வன்

செல்வன் எழுதிய கட்டுரை - அவரது அனுமதியுடன் இங்கே சேமிக்கப்படுகிறது
இது பற்றிய விவாதங்களுக்கு அவரது பதிவை பார்க்கவும்.
Sunday, January 27, 2008
373.அழித்தொழிப்பு

செல்வன்



பாசிசம் என்பது எதிர்கருத்து சொல்பவனை அழித்தொழித்து அந்த கருத்தை அழிப்பது ஆகும். பாசிஸ்டுகள் எதிர்கருத்தை எப்போதும் வளரவிடுவதே இல்லை.எதிர்கருத்து கொண்டிருப்பவனை அழித்துத்தான் அவனது கருத்தை எதிர்கொள்வது என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

பாஸிஸ்டுகளுக்கு வெளிப்பகையை விட உட்பகை அதிகமாக இருப்பது இதனால்தான்.பாசிசம் ஜெயிக்க ஒத்த சிந்தனை தேவை.ஒத்த சிந்தனை இல்லாதவன் எதிரி.ஒத்த சிந்தனையை திரிப்பவன் துரோகி.எதிரியை விட துரோகி ஆபத்தானவன்.துரோகியை எதிர்கொள்ளும் விதம் மரணம்தான்.துரோகத்துக்கு மரணம் தானே பரிசு?

எதிர்கட்சியில் இருக்கும்போது ஜனநாயக போர்வையில் இயங்கும் கம்யூனிசம் ஆளுங்கட்சியானதும் பாசிசமாக உருவெடுப்பது இதனால்தான்.20ம் நூற்றாண்டில் தோன்றிய முதல் பாசிச சித்தாந்தம் கம்யூனிச சித்தாந்தம்தான்.இந்த விதத்தில் லெனினும் ஸ்டாலினும் ஹிட்லருக்கும் முசோலினுக்கும் குருவை போன்றவர்கள்.மார்க்ஸின் காலத்தில் பேப்பரில் இருக்கும் ஒரு தத்துவமாக அறிமுகமான கம்யூனிசம் ஆட்சியை பிடித்ததும் பாசிசமாக உருவெடுத்தது.

கிடைத்த ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள கம்யூனிசம் எதிர்கட்சிகளையும், மாற்று கருத்துக்களையும், தேர்தலையும், ஜனநாயகத்தையும் நிராகரித்தது. எதிர்க்குரலை அழிக்க வலிமையான ஆயுதம் ஒன்றை இந்த பாசிச அமைப்பு கையில் எடுத்தது.அது தான் அழித்தொழிப்பு.

பாசிசம் பீதியிலும், பயத்திலும் தான் இயங்கும்.சிறுகுழு ஒன்று ஆட்சியை பிடிப்பதும், அதை தக்க வைத்துகொள்வதும் பீதியின் மூலமாகத்தான் இருக்க முடியும்.அதனால் அழித்தொழிப்பு என்ற வன்மையான ஆயுதத்தை கம்யூனிசம் கையில் எடுத்தது.லெனினால் கையில் எடுக்கப்பட்ட அந்த ஆயுதம் அதன்பின் ஸ்டாலின், மாவோ, போல்பாட், கிம் டே ஜங் என்று கைமாறி போய்க்கொண்டே இருந்ததே தவிர கைவிடப்பட்டதில்லை.

நக்சல்பாரிகள் உலாவிய வங்கத்தில் பயத்துடன் உச்சரிக்கப்பட்ட அழித்தொழிப்பு என்ற ஆயுதத்தின் தந்தை லெனின்.ஆம்..ஆட்சியை பிடித்ததும் லெனின் செய்த முதல் காரியம் ரஷ்ய ஜார் நிக்கலசை அவரது பெண்டு பிள்ளைகளூடன்,குழந்தை குட்டிகளுடன் ஒட்டுமொத்தமாக அழித்தொழித்தது தான்.


(லெனினால் அழித்தொழிப்பு செய்யப்பட்ட சார் நிக்கலஸின் குடும்பம்)

ஆட்சியை பிடிப்பவர்கள் முன்னாள் ஆட்சியாளரை கொல்வது புதிதல்ல. கட்டபொம்மனை தூக்கிலிட்ட வெள்ளையர், சதாமை தூக்கிலிட்ட அமெரிக்கா துவங்கி பூட்டோவை தூக்கிலிட்ட ஜியா-உல்-ஹக் வரை அனைவரும் செய்த காரியம் தான் இது.ஆனால் ஆட்சியாளரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும், மனைவி, சிறுகுழந்தை உட்பட கொன்று குவிப்பதை பாசிஸ்டுகளை தவிர எவனும் செய்ததில்லை. சதாமை தூக்கிலிட்ட அமெரிக்கா இன்றும் அவரது குடும்பத்தினரை தொடவில்லை. ஒசாமாவின் மகன் இங்கிலாந்து பெண்ணை மணந்துகொண்டு ஆப்பிரிக்காவில் ஒட்டக ரேஸ் விடுவதை பற்றி கதைக்கிறார்.பூட்டோவை தூக்கிலிட்ட ஜியா -உல்ஹக் கூட பேனசிரை தொடவில்லை.

ஆனால் லெனின் இந்த வரம்புகளை எல்லாம் சர்வசாதாரணமாக மீறியவர். ட்சாரின் குழந்தைகளையும், மனைவியையும் சுட்டுக்கொல்வதில் அவருக்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. முதல் முதலில் ரோமானோவ் அரச வம்சத்தின் மீது பாய்ந்த அழித்தொழிப்பு எனும் ஆயுதம் அடுத்து சொந்த கட்சியினர் மீது பாய்ந்தது.கம்யூனிசத்தை எப்படி உலகத்துக்கு பரப்புவது எனும் சித்தாந்த மோதல் ட்ராட்ஸ்கிக்கும், ஸ்டாலினுக்கும் ஏற்பட்டு அது உள்கட்சி சண்டையாக மாறி கடைசியில் அந்த விவாதத்தை முடித்து வைக்க அழித்தொழிப்பு எனும் கொடூர ஆயுதம் ஸ்டாலினால் பயன்படுத்தப்பட்டது. ஆம் ட்ராட்ஸ்கி ஆயுதம் தாங்கிய அடியாள் கும்பலால் கோடரியால் வெட்டி கொல்லப்பட்டார். இன்னமும் ஐரோப்பிய, அமெரிக்க இடதுசாரிகளால் கொண்டாடப்படும் நபர் ட்ராட்ஸ்கி.அவர் மீது அழித்தொழிப்பை பிரயோகிக்க ஸ்டாலின் எந்த தயக்கமும் காட்டவில்லை.

அழித்தொழிப்பு எனும் ஆயுதம் அடுத்து உக்ரேன், செசென்யா பொதுமக்கள் மீது பாய்ந்தது.கூட்டம் கூட்டமாக மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.அடக்குமுறைக்கு பணீய மறுத்த மக்கள் கூட்டம்,கூட்டமாக குலாக் எனும் கொட்டடிகளில் அடைகக்ப்பட்டு கொல்லப்பட்டனர்.ஸ்டாலின் காலத்தில் 10% ரஷ்யர்கள் இந்த குலாக்களில் அடைக்கப்பட்டிருந்தனர்.அதே சமயம் இந்தியாவில் கம்யூனிஸ்டுகள் "ரஷ்யாவில் குற்றமே கிடையாது, ஜெயிலே கிடையாது" என்று புளுகித்திரிந்தனர். இன்றும் அந்த புளுகுகளை அள்ளி வீசும் காம்ரேடுகள் உண்டு.

உலகெங்கும் இளைஞர்களின் டீஷர்டுகளில் வீற்றிருக்கும் சேகுவேரா அழித்தொழிப்பை மிக தீவிரமாக நம்பியவர்.புரட்சியாளன் என்றால் யார், அவனை எது செய்யவேண்டும் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கத்தை பாருங்கள்

"To send men to the firing squad, judicial proof is unnecessary...These procedures are an archaic bourgeois detail. This is a revolution! And a revolutionary must become a cold killing machine motivated by pure hate. We must create the pedagogy of the paredon (the execution wall)"

"மக்களை பயரிங் ஸ்க்வாடுக்கு அனுப்ப விசாரணை என்பதே வேண்டியதில்லை.நீதி விசாரனை என்பது பூர்ஷ்வா மனப்பான்மை.இப்போது நடப்பது புரட்சி.ஒரு புரட்சியாளன் வெறுப்புணர்வால் உந்தித்தள்ளப்பட்ட கொலைகார இயந்திரமாக இருக்க வேண்டியது அவசியம்.(புரட்சி வெற்றியடைய) சுவற்றின் மூலம் கல்வி கற்பிக்கும் முறையை நாம் அமுல்படுத்த வேண்டியது அவசியம்"

('சுவற்றின் மூலம் கல்வி' என்பது சுவற்றின் முன்னே நிறுத்தி பயரிங் ஸ்க்வாடால் சுட்டு கொல்வதை குறிக்கிறது)

ஆனால் சேகுவாராவின் எதிரிகள் அனைவருக்கும் இப்படி பயரிங் ஸ்க்வாடால் சுட்டுக்கொல்லப்படும் பாக்கியம் கிடைக்கவில்லை.அவர்களை சேரில் கட்டி வைத்து பிஸ்டலை கையில் எடுத்துக்கொண்டு அறை முழுக்க நடந்து சென்று அவனை திட்டியபடி, திடீரென பிஸ்டலால் அவன் தலையை சுட்டு மூளையை சிதறடிப்பது சேகுவேராவின் வழக்கம்.அப்போது சேவின் நண்பர்கள் அவரை சுற்றி நிற்பார்களாம்.

கொலையை கண்டு அஞ்சி நடுங்கும் நண்பர்களிடம் துப்பாக்கியில் கிளம்பும் புகையை ஊதி விட்டபடி சே அடிக்கும் வழக்கமான டயலாக் "லுக்..இதில் எல்லாம் முதலில் நீ கொல்கிறாயா அல்லது உன்னை அவன் கொல்கிறானா என்பது தான் கேள்வி"

கியூபாவில் அழித்தொழிப்பின் நாயகன் சேகுவேரா தான்.அதனால் தான் காஸ்ட்ரோ அவரை கியூபாவின் 'புகழ் பெற்ற' லா கபானா சிறையின் தலைமை எக்ஸிகுயூஷனராக நியமித்தார்லா கபானா சிறையில் கொல்லப்பட்டவர்கள் பலர் சேவின் முன்னாள் காம்ரேடுகள் தான்.அவர்கள் செய்த குற்றம் காஸ்ட்ரோ ஜனநாயகத்தை அமுல்படுத்துவார் என்று நம்பியதுதான்....கணக்கற்ற வர்க்க எதிரிகளை அந்த சிறையில் கட்டி வைத்து சுட்டுக்கொன்றிருக்கிறார் சே குவேரா..நீதியாவதி விசாரணையாவது? மூச்..

மாவோ இந்த ஆயுதத்தை விதவிதமான முறைகளில் பரிசோதித்தார்.அவரது ஆட்சியில் சுமார் பத்துகோடி சீனர்கள் மேல் இந்த ஆயுதம் பாய்ந்தது.அவரது சீடர்களான போல்பாட், கிம் டே ஜங் போன்றோர் கம்போடியா, வட கொரியா போன்ற நாடுகளில் கூட்டம் கூடமாக மக்களை கொன்று குவித்து, மண்டை ஓடுகளை அடுக்கி வைத்து இந்த ஆயுதத்துக்கு ஆயுத பூஜை போட்டனர்.

குறுங்குழுவாக இயங்கும் இந்திய மாவோயிஸ்டுகள் குண்டுவைப்பு, மிராசுதார்களை அழித்தொழித்தல் என்று இந்த ஆயுதத்தை பிரயோகித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

1 comment:

Vi said...

அழித்தொழிப்பு என்பது இயற்கைக்கு முரணானது. இயற்கைக்கு முரணான எந்த செயலும் நிரந்தரமாய் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாது.

டிராட்ஸ்கி சர்வதேசவாதத்தை முன்னிறுத்தியதும் சிந்திக்க வேண்டிய விஷயம் தான்.

நன்றி தமிழ்மணி